உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. 26-ம் தேதி வரை தொடரும். கும்பமேளாவில் இதுவரை 29 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். திரிவேணி சங்கமத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கங்கை படித்துறையில் மிக பிரமாண்டமாக நடத்தப்படும் கங்கா ஆரத்தி வரும் 5-ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக கங்கா சேவா நிதி சங்க தலைவர் சுஷாந்த் மிஸ்ரா நேற்று தெரிவித்தார்.
இதேபோல் படித்துறையில் ஷீத்லா படித்துறை, அஸ்ஸி படித்துறை உள்ளிட்ட பகுதிகளில் வரும் 5-ம் தேதி வரை ஆரத்தி நிகழ்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். பக்தர்கள் அதிக அளவில் கூடும் போது கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த 28-ம் தேதி அதிகாலை திரிவேணி சங்கமத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.