சென்னை: தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின்படி, அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 2 செ.மீ. , திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊத்து, நாலுமுகு, காக்காச்சி, செர்வலார் அணை, சேரன்மகாதேவி, தேனி மாவட்டம், மற்றும் தென்காசி மாவட்டத்தில் ராமநதி அணை, பெரியகுளத்தில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தை நோக்கி வீசும் கிழக்குக் காற்றின் வேக மாறுபாட்டால், இன்று தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும். தமிழகத்தில் காலையில் லேசான பனிமூட்டம் காணப்படும். பிப்., 3 முதல் 7 வரை வறண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.