கோவை: திட்டமிட்டபடி பிப்.4-ம் தேதி திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பரங்குன்றம் முருகன் மலையை சிக்கந்தர் மலை என்று கூறி சமீபகாலமாக பிரச்னைகள் எழுந்தன. ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி பிரியாணி எடுத்து சாப்பிட்டு மலையின் புனிதத்தை கெடுத்தார். எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் இந்துக்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்படுகிறது என்பதை பக்தர்கள் புரிந்து கொண்டனர். அதனால் திருப்பரங்குன்றம் காக்க வேண்டும் என்ற உணர்வு பக்தர்களிடையே தன்னெழுச்சியாக எழுந்து வருகிறது.
இப்பிரச்னை குறித்து, திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை காக்க, இந்து முன்னணி சார்பில், வரும், 4-ம் தேதி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த உள்ளது. இதற்கு பல ஆன்மிக தலைவர்கள் மற்றும் பலர் தார்மீக ஆதரவு அளித்துள்ளனர். லட்சக்கணக்கான துறவிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இது மிகவும் ஊக்கமளிக்கிறது. இதையெல்லாம் ஒடுக்கும் வகையில் நள்ளிரவில் போராட்டம் தொடர்பாக போஸ்டர் ஒட்டுபவர்களை, நோட்டீஸ் கொடுப்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் இறைச்சி சாப்பிட்டவர்களை கைது செய்யாமல், சமணர்கள் வாழ்ந்த படுக்கைகளில் பச்சை பெயின்ட் அடித்தவர்களை கைது செய்யாமல், முருகன் மலையை காக்க ஜனநாயக முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்துபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆன்மிக அன்பர்களை மிரட்டும் அரசு திமுக. தமிழக அரசு இந்துக்களை ஒடுக்க நினைக்கக் கூடாது. திட்டமிட்டபடி பிப்ரவரி 4-ம் தேதி போராட்டம் நடைபெறும்.
இந்த போராட்டம் தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும். செய்தியாளர்களிடம் கூறினார். செய்தியாளர் சந்திப்பின் போது மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ், மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் ஆகியோர் உடனிருந்தனர்.