ஐஐடி மற்றும் என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேர, கூட்டு நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இது ஜேஇஇ மெயின்ஸ் மற்றும் மெயின்ஸ் என 2 பிரிவுகளாக நடத்தப்படுகிறது. இதில், மெயின் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்துகிறது. இந்த தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை, ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படுகிறது.
அதன்படி, 2025-26-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ மெயின்ஸ் 1-ம் கட்ட தேர்வு ஜனவரி 22 முதல் 30 வரை நடைபெற்றது. சுமார் 13 லட்சம் பேர் தேர்வெழுதினர். முடிவுகள் பிப்ரவரி 12-ம் தேதி வெளியிடப்படும். இந்நிலையில், ஜேஇஇ மெயின் 2-ம் கட்ட தேர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தற்போது துவங்கியுள்ளது.
ஆர்வமுள்ள மாணவர்கள் பிப்ரவரி 25-ம் தேதிக்குள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். முதல்கட்ட தேர்வில் கலந்து கொண்டவர்களும் இதில் பங்கேற்கலாம். தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும். ஹால் டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட பிற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இது பற்றிய கூடுதல் தகவல்களை https://nta.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால், 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண்ணையோ அல்லது jeemain@nta.ac.in என்ற மின்னஞ்சலையோ தொடர்பு கொண்டு தெளிவுபடுத்தலாம் என என்டிஏ தெரிவித்துள்ளது.