சென்னை: ‘பருந்து’ செயலி மூலம் ரவுடிகளை கண்காணிப்பது எப்படி என அனைத்து காவல் நிலைய போலீஸாருக்கும் வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது.
கொலை, முன் விரோத கொலை, ரவுடிகள் மோதல், கொள்ளை, வழிப்பறி, திருட்டு, கடத்தல் உட்பட அனைத்து வகையான குற்றச்செயல்களையும் முற்றிலும் தடுக்க சென்னை காவல் ஆணையர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக ரவுடிகளை தொழில் நுட்பம் வாயிலாக கண்காணிக்கும் வகையில், ‘பருந்து’ செயலி உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. காவல் நிலையங்களில் ரவுடி பட்டியலில் இருப்பவர்கள், அவர்களின் தற்போதைய நிலை, அவர்களின் குற்றச் செயல்கள் விவரம், அவர்கள் மீது உள்ள வழக்கு விவரங்கள், அவரது எதிர்தரப்பினர், கூட்டாளிகள், சிறையில் இருக்கிறாரா, வெளியே இருக்கிறாரா, அவரது பகுதியிலேயே வசிக்கிறாரா, வேறு எங்கேனும் இடம் பெயர்ந்து விட்டாரா என்பது உட்பட ரவுடிகளின் அனைத்து விபரங்களும் தினமும் கண்காணித்து ‘பருந்து’ செயலியில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.
குறிப்பாக ஏ, ஏ பிளஸ், சி என 3 வகையாக பிரித்து ரவுடிகள் கண்காணிப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டு இருப்பார்கள். அதன்படி, சென்னையில் ரவுடி பட்டியலில் சுமார் 6 ஆயிரம் பேர் உள்ளனர். இதில் 758 பேர் சிறையில் உள்ளனர். ரவுடிகளை தினமும் கண்காணிப்பது அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்களின் பொறுப்பாகும். அதாவது, ரவுடி தொடர்பான தகவல்களை தினமும் சேகரிக்க வேண்டும். ரவுடி வீட்டிலிருந்தாலும், வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தாலும் அதுகுறித்து பருந்து செயலியில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதை சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட துணை ஆணையர்கள், அதற்கு மேல் உள்ள 4 இணை ஆணையர்கள், 2 கூடுதல் ஆணையர்கள் கண்காணித்து உடனுக்குடன் தேவைப்படும் உத்தரவுகளை பிறப்பிப்பார்கள். அதை அடிப்படையாக வைத்து நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை போலீஸ் அதிகாரிகள் மேற்கொள்வார்கள்.
ஆனால், இச்செயலியின் நோக்கம் குறித்து களப்பணியில் உள்ள போலீஸார் சிலருக்கு தெரியவில்லை. இதையறிந்த போலீஸ் அதிகாரிகள் பருந்து செயலி குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் அதனை செயல்படுத்துவது குறித்தும் ரவுடிகளின் விபரங்களை எவ்வாறு செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு தகவல்களை எளிமையான தமிழில், காவல் நிலைய பயனாளர்களின் வழிகாட்டி என்ற பெயரில் 18 பக்கத்தில் புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகம் தற்போது சென்னை பெருநகர காவல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் சரக உதவி ஆணையர்களுக்கும் தலா ஒன்று என்ற விகிதத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதை படித்து உதவி ஆணையர்கள் தங்களுக்கு கீழ் நிலையில் உள்ள போலீஸாருக்கு விளக்கம் அளிப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரவுடிகளை கண்காணிக்கும் பருந்து செயலி தற்போது சென்னையில் மட்டுமே உள்ளது. இந்த செயலி விரைவில் தாம்பரம், ஆவடி, திருச்சி, கோவை, சேலம், மதுரை, நெல்லை, திருப்பூர் உள்ளிட்ட 8 காவல் ஆணையரக பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.