திருமலை: திருப்பதி வேத பல்கலைக்கழக வளாகத்திற்குள் இன்று மீண்டும் சிறுத்தை புகுந்தது. இதனால், மாணவர்கள், பேராசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர். ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அங்குள்ள பல்கலைக்கழகம் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களாக வேதிக் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இரவு நேரத்தில் சிறுத்தைப்புலிகள் புகுந்து வருகின்றன.
இதனால் மாணவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதையறிந்த வனத்துறையினர் இரவு நேரங்களில் மாணவர்கள் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை வனத்துறையினர் வேத பல்கலைக்கழக வளாகம் அருகே வாகனத்தில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, வளாகத்தில் உள்ள முட்புதரில் சிறுத்தைப்புலி அமர்ந்திருப்பதை பார்த்து சைரன் அடித்து வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர்.
ஆனால் சைரன் ஒலித்தாலும் அசையாமல் அப்படியே இருந்தது. இதனால் வாகனத்தில் வனத்துறையினர் காத்திருந்தனர். சிறிது நேரம் கழித்து சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றது. இரண்டு நாட்களுக்கு முன்பு இதே பல்கலைக்கழக வளாகத்தில் தெருநாயை கடித்த சிறுத்தை இன்று அதிகாலை வளாகத்திற்கு திரும்பியதால் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.