சென்னை: வடமாநிலங்களில் இருந்து வீசும் குளிர் காற்று தான் இதற்கு காரணம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாலைகளில், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவுகிறது. எதிரே வரும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய வைத்துதான் வர வேண்டும்.
இது போன்ற நிலை தமிழகம் முழுவதும் காணப்படுகிறது. அதிகாலை 3 மணிக்கு தொடங்கிய பனிமூட்டம் பல இடங்களில் காலை 9 மணி வரை நீடித்தது. வட மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு உள்ளது. இமயமலைப் பகுதியில் இருந்து வீசும் குளிர் காற்று தெற்கு நோக்கி வருவதாலும், கடல் மட்டத்தில் வீசும் குளிர்ந்த காற்று நிலத்தை நோக்கி நகர்வதாலும் கடும் பனிமூட்டம் நிலவுவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பனிமூட்டம் மற்றும் பனிப்பொழிவு காரணமாக சில இடங்களில் விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள், கார்கள், கனரக வாகனங்கள், பைக்குகள் முகப்பு விளக்கை எரிய வைத்து மெதுவாக செல்கின்றன. எதிரே வரும் வாகனங்கள் கூட தெரிவதில்லை.
காலை 8 மணி ஆகியும் பனிப்பொழிவு குறையவில்லை. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வருகின்றனர். பனிப்பொழிவு காரணமாக செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் 10 நிமிடம் தாமதமாக இயக்கப்படுகிறது.
மேலும், செங்கல்பட்டில் இருந்து திருப்பதி, அரக்கோணம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்கள் தாமதமாக புறப்பட்டன. இது தவிர தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் தாமதமாக வந்தன. ரெயில்களும் முகப்பு விளக்குகளை எரிய வைத்துதான் ஓடின.