புதுடெல்லி: வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகர்தலாவில் உள்ள அந்நாட்டு தூதரகத்தை முற்றுகையிட்டு இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தூதரகத்துக்குள் புகுந்த சிலர் அங்கிருந்த நாட்டின் தேசியக் கொடியை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, வங்கதேச அரசு அகர்தலா துணை தூதரகத்தின் சேவைகளை டிசம்பர் 3-ம் தேதி முதல் நிறுத்தி வைத்தது.மேலும், அகர்தலாவில் உள்ள வங்காளதேச தூதர் ஆரிப் மஹாமத் டாக்காவுக்கு திரும்ப அழைக்கப்பட்டார்.
இந்நிலையில், இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு இன்று முதல் விசா மற்றும் தூதரக சேவைகள் தொடங்கப்படும் என வங்கதேசம் அறிவித்துள்ளது. “வங்காளதேச தூதரகத்தில் அனைத்து விசா மற்றும் தூதரக சேவைகளும் பிப்ரவரி 5 முதல் மீண்டும் தொடங்கும்” என்று அகர்தலாவில் உள்ள பங்களாதேஷ் தூதரக அலுவலகத்தின் முதன்மை செயலாளர் முகமது அல் அமீன் தெரிவித்தார். டிசம்பர் 2024 சம்பவத்தைத் தொடர்ந்து, அகர்தலா துணைத் தூதரகத்தில் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.