மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூரை சுற்றியுள்ள கெத்தை, கிண்ணக்கொரை, அவலாஞ்சி, அப்பர்பவானி, தாய்சோலை உள்ளிட்ட பகுதிகளில் அடர்ந்த காப்புக்காடுகள் உள்ளன. இந்த காடுகளில் பல வகையான மரங்கள், செடிகள், மூலிகைகள், புதர்கள் மற்றும் கொடிகள் உள்ளன. சிறுத்தைகள், புலிகள், யானைகள், கரடிகள், மான்கள், காட்டு கால்நடைகள், சிவப்பு நாய்கள், கருங்குரங்குகள் மற்றும் முள்ளம்பன்றிகள் போன்ற வன விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்விடமாகவும் காடுகள் உள்ளன.
இந்த காடுகளுக்கு இடையே அருவிகள், ஓடைகள், குளங்கள் உள்ளதால், வன விலங்குகளுக்கு தேவையான உணவு, இரை, குடிநீர் போன்றவை கிடைத்து வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய பனியின் தாக்கம் 3 மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. உறைபனியும் அவ்வப்போது விழுகிறது. இதனால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.

மரங்கள், செடி, கொடிகள், புல்வெளிகள் காய்ந்து வருகின்றன. மழை இல்லாததாலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வறட்சியாலும் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. மஞ்சூர் அருகே பெரும்பள்ளம், முள்ளி, தொட்டஹள்ளா, பிகுளி உள்ளிட்ட பெரும்பாலான ஆறுகளில் நீர்வரத்து குறைந்துள்ளது.
இதனால் உணவு மற்றும் குடிநீர் தேடி வன விலங்குகள் இடம் பெயர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், மின் உற்பத்தி மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் அணைகள், நீர்த்தேக்கங்களில் நீர் இருப்புகளும் வெகுவாக குறைந்து வருவதால், வரும் வாரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.