சென்னை: தைப்பூச நாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரப் பதிவு அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- அசையா சொத்துகள் தொடர்பான ஆவணப் பதிவுகளை சுப நாட்களில் செய்ய பொதுமக்கள் விரும்புவதால், பொது விடுமுறை மற்றும் உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்ட சில சுப தினங்களில் பதிவு அலுவலகங்கள் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, வரும் தைப்பூச தினமான 11.02.2025 (செவ்வாய்கிழமை) அன்று ஆவணப் பதிவுகளை எளிதாக்கும் வகையில், தமிழகத்தில் அமைந்துள்ள அனைத்துப் பத்திரப் பதிவு அலுவலகங்களும் அன்று காலை 10.00 மணி முதல் மாலை 6 மணி வரை வழக்கம்போல் செயல்படும். விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணங்களை பதிவு செய்வதற்கு, விடுமுறை நாளில் ஆவணங்களை பதிவு செய்வதற்கான கட்டணம், பதிவுச் சட்டத்தின் பிரிவு 17(3) A, B, C ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்துடன் கூடுதலாக வசூலிக்கப்படும்.

அன்றைய தினம், ஸ்டார் 2.0 திட்டத்தின் கீழ் அனைத்து அலுவலகங்களிலும் ஆவணங்களை ஆன்லைனில் பதிவு செய்வதை உறுதி செய்யும் வகையில், பொதுமக்கள் முன் பதிவு செய்யும் வசதி மற்றும் அலுவலக பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு உதவி மையம், ஹெல்ப்லைன் வசதி ஆகியவை தடையின்றி ஏற்படுத்தப்பட வேண்டும். துணைப் பதிவாளர்கள் மற்றும் மாவட்டப் பதிவாளர்கள் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட துணைப் பதிவாளர் அலுவலகங்களின் செயல்பாட்டைக் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.