சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:- கடந்த 2021 தேர்தல் பிரசாரத்தில், ”பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்” என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்ய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க 9 மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அரசின் இந்த முடிவு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் என அனைத்து தரப்பினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தமிழக அரசு ஓய்வூதியம் குறித்து ஆய்வு செய்யும் குழுவின் முடிவை மறுபரிசீலனை செய்து, ஆசிரியர்கள், அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஏற்று கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.