கடலூர்: போலி சான்றிதழ்கள் குறித்து விசாரணை… கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி கிராமத்தில் வாய்க்காலில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பெயரில் அச்சிடப்பட்ட போலி சான்றிதழ்கள் வீசப்பட்டது குறித்த விசாரணையை சிபிசிஐடி போலீசார் தொடங்கியுள்ளனர்.
சான்றிதழ் கிடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட சிபிசிஐடி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான குழுவினர் , வாய்க்காலின் எதிர்ப்புறம் உள்ள வயல்வெளியில் மேலும் சில போலி சான்றிதழ்களை கைப்பற்றினர்.
இது குறித்து அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களிடமும், அதுகுறித்து புகார் அளித்த அதிகாரியிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
போலி சான்றிதழ் விவகாரத்தில், சிதம்பரத்தைச் சேர்ந்த சங்கர், நாகப்பன் ஆகியோரை ஏற்கனவே கைது செய்த போலீசார், அவர்களின் வீடுகளிலிருந்து ஏராளமான போலி சான்றிதழ்கள், லேப்டாப், பிரிண்டர், போலி முத்திரை, போலி அடையாள அட்டைகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளனர்.