சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழாவில், பக்தர்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்ய தடை விதிக்கப்படாத நிலையில், தடங்கல் ஏற்பட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன உற்சவம் நாளை முதல் மூன்று நாட்கள் நடக்கிறது. இந்த நிகழ்வின் போது பக்தர்கள் கனகசபையில் நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கனகசபையில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்த அரசு உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என அறநிலையத் துறையினர் தெரிவித்தனர்.
அதன்பிறகு, கனகசபையில் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கும் அரசு உத்தரவில் தலையிடுபவர்கள் மீது சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளிக்குமாறு மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், இதுகுறித்து அடுத்த வாரம் அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர்.