நியூயார்க்: கடந்த குளிர்காலத்தில் பனிப்பொழிவு குறைவு காரணமாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் பனி உறைவு எல்லையின் அளவு 150 மீட்டர் குறைந்திருத்தது தெரியவந்துள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாக ஆர்க்டிக், அண்டார்டிகா துருவ பகுதிகளில் பனிப்பாறைகள் உருகி வருவதாக செய்திகள் வெளியாயின. இதே நிலை கடல் மட்டத்தில் இருந்து 8,849 மீட்டர் உயரத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்திலும் காணப்படுகிறது. எவரெஸ்ட் சிகரத்தின் உச்சி நேபாளம் மற்றும் திபெத் இடையே அமைந்துள்ளது.
இங்கு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் முதல் கடந்த ஜனவரி வரை நாசா எடுத்த செயற்கைகோள் படங்களை ஆராய்ந்ததில் கடந்த 2 ஆண்டுகளாக ஜனவரியில் பனி உறைவு எல்லையின் அளவு அதிகரித்ததாகவும், கடந்த குளிர் காலத்தில் பனிப்பொழிவு குறைவு காரணமாக எவரெஸ்ட் மலை உச்சியில் பனி உறைவு எல்லை 150 மீட்டர் குறைந்ததாக பனிப்பாறைகளை ஆராயும் நிபுணரும், அமெரிக்காவின் நிக்கோலஸ் கல்லூரியின் சுற்றுச்சூழல் அறிவியல் பேராசிரியருமான மவுரி பெல்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு முதல் குளிர்காலங்களில் இங்கு வறண்ட வானிலை காணப்பட்டதால், பனி உறைவின் எல்லை குறைந்ததாக கூறுகிறார். இந்த குளிர்காலத்தின் துவக்கத்தில் சில பனிப்பொழிவுகள் ஏற்பட்டாலும், பனிபடர்ந்த நிலை நீடிக்கவில்லை.
எவரெஸ்ட் சிகரத்தில் பனி மலைகள் தொடர்ந்து உருகி 6 ஆயிரம் மீட்டருக்கு மேல் குறைந்து விட்டதாகவும், இங்கு பனி தினமும் 2.5 மில்லி மீட்டர் அளவுக்கு நேரடியாக ஆவியாவதாகவும் மவுரி பெல்டோ தெரிவித்துள்ளார்.