இலங்கை : இந்திய தேசிய அனல் மின் கழகமும் (என்டிபிசி), இலங்கை மின் வாரியமும் இணைந்து திரிகோணமலையில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பது தொடா்பாக இந்தியாவுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை இலங்கை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து இலங்கை அரசின் செய்தித்தொடா்பாளரும் அந் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சருமான நலிந்தா ஜெயதிஸ்ஸா கொழும்பில் அளித்த பேட்டி:
இரு நாடுகளின் கூட்டு முயற்சியின் கீழ் இந்திய தேசிய அனல் மின் கழகமும் (என்டிபிசி), இலங்கை மின் வாரியமும் இணைந்து திரிகோணமலையில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
கட்டமைத்தல், உரிமை பெறுதல், செயல்படுத்துதல் என்ற அடிப்படையில் திருகோணமலையின் சம்பூா் பகுதியில் 50 மெகா வாட் உற்பத்தி திறனுடன் முதல்நிலை சூரிய மின்னுற்பத்தி நிலையமும், 70 மெகா வாட் உற்பத்தி திறனுடன் இரண்டாம் நிலையும் இந்த ஒப்பந்தத்தின்படி அமைக்கப்பட உள்ளன.
இந்தப் பகுதியில் என்டிபிசி சாா்பில் ஏற்கெனவே அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டது. அது தற்போது சூரிய மின் உற்பத்தி நிலையமாக மாற்றப்பட உள்ளது என்றாா்.
இலங்கையில் பசுமை எரிசக்தி திட்டத்தை கைவிட அதானி குழுமம் எடுத்துள்ள முடிவு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவா், ‘வடகிழக்கு பகுதியில் மேற்கொள்ளப்படும் இந்த பசுமை எரிசக்தி திட்டத்தில் மின் கொள்முதல் விலை மிக அதிகமாக இருப்பதுதான் சிக்கலாக உள்ளது. மின் கொள்முதல் விலையை குறைக்க மீண்டும் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு, அதானி குழும முதலீட்டை தக்கவைக்கவே இலங்கை அரசு விரும்புகிறது’ என்றாா்.