வாடிகன்: கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 87 வயதான போப்பின் உடல்நிலை மோசமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (வயது 88) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நிமோனியா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த வியாழன் மாலை அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதயம் நன்றாக இயங்கி வருவதாகவும் வாடிகன் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை காலை வெளியான தகவலின்படி, ‘நேற்று இரவு அவர் நன்றாக ஓய்வெடுத்தார். போப் பிரான்சிஸ் இன்று காலை எழுந்து காலை உணவை உட்கொண்டார்.’
இந்நிலையில் போப் ஆண்டவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், அவரது ரத்தத்தில் ஒரு வகை ரத்த அணுக்கள் குறைவாக இருந்ததால் அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. போப் பிரான்சிஸ் சுயநினைவுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது, ஆனால் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் இருப்பதால் அவருக்கு ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது. போப் பிரான்சிஸ் குணமடைய உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். போப் பிரான்சிஸின் உடல்நலக்குறைவு சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.