புதுடெல்லி: விவாகரத்துக்குப் பிறகு முஸ்லிம் பெண் தனது கணவரிடம் ஜீவனாம்சம் கோரலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது முன்னாள் மனைவிக்கு ரூ.10,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்ற தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து முஸ்லிம் நபர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் நாகரத்னம், அகஸ்டின் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஜூலை 10) விசாரணைக்கு வந்தது. ஒரு முஸ்லீம் நபர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு சட்டம், 1986ன் கீழ் ஜீவனாம்சம் கேட்க முடியாது” என்று வாதிட்டார்.
இதை ஏற்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மேலும் நீதிபதிகள் கூறியதாவது: விவாகரத்து பெற்ற மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுப்பது தொண்டு போன்றது அல்ல. அது திருமணமான பெண்ணின் அடிப்படை உரிமை.
இது மதங்களைக் கடந்து, பாலின சமத்துவத்தைக் கொண்டுவருகிறது மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பைப் பெற பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. சட்டப்பிரிவு 125 திருமணமான பெண்களுக்கு மட்டுமின்றி அனைத்து பெண்களுக்கும் பொருந்தும்.
மனைவியின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வது கணவனின் கடமை. அவர்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய, கூட்டு வங்கி கணக்கு மற்றும் ஏடிஎம் வசதியை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இஸ்லாமியர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.