வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் USAID அமைப்பின் 2,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளார். செலவுகளைக் குறைப்பதற்கும் அரசாங்கத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், DOGE என்ற புதிய நிர்வாகத் துறையை டிரம்ப் உருவாக்கியுள்ளார். இந்தத் துறையின் தலைவராக தொழிலதிபர் எலோன் மஸ்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
டிரம்ப் நிர்வாகத்தின் புதிய நடவடிக்கையாக, அமெரிக்கா வெளிநாடுகளுக்கு வழங்கும் அனைத்து நிதி உதவிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் மனிதாபிமான மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக USAID அமெரிக்க அரசாங்க நிதியைப் பெற்றது. இந்த அமைப்பின் ஆண்டு பட்ஜெட் 50 பில்லியன் டாலர்கள் (நான்கு லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய்). நிதி நிறுத்தப்பட்டதால், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்தனர்.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு எதிராக ஊழியர் சங்கம் வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த வாஷிங்டன் நீதிமன்றம் முதலில் நிதியை நிறுத்துவதற்கான உத்தரவைத் தடுத்தது. பின்னர், தலைமை நீதிபதி கார்ல் நிக்கோல்ஸ் தடையை நீக்கி தீர்ப்பளித்தார். இதன் பிறகு, 2,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
USAID அமைப்பிலிருந்து 2,000 பதவிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு சில முக்கிய பதவிகளைத் தவிர அனைத்து ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் டிரம்ப் நிர்வாகம் ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளது.