புதுடெல்லி: சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் ஹைபிரிட் எலக்ட்ரிக் கார்களுக்கான பதிவு கட்டணத்தை முழுமையாக தள்ளுபடி செய்வதாக உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக, இந்த கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.1.50 லட்சம் முதல் ரூ.3.50 லட்சம் வரை பயனடையலாம்.
தகவலறிந்த வட்டாரங்களின்படி, உ.பி அரசு கடந்த ஜூலை 5 முதல் ‘ஸ்ட்ராங் ஹைப்ரிட்’ மின்சார வாகனங்கள் மற்றும் ‘பிளக்-இன் ஹைப்ரிட்’ எலக்ட்ரிக் வாகனங்களின் பதிவுக் கட்டணத்தில் 100 சதவீத தள்ளுபடி கொள்கையை அமல்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு மின்சார வாகனங்களுக்கான பதிவு கட்டணத்தை முழுமையாக தள்ளுபடி செய்துள்ளது.
சாலை வரியைப் பொறுத்தவரை, உ.பி.யில் ரூ.10 லட்சத்துக்கும் குறைவான மதிப்புள்ள வாகனங்களுக்கு 8 சதவீதம்; 10 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள வாகனங்களுக்கும் 10 சதவீதம் வசூலிக்கப்படுகிறது.
பொதுவாக, வலிமையான கலப்பின மின்சார வாகனங்கள் முற்றிலும் மின்சாரத்தில் குறுகிய தூரத்தையும், மின்சார சக்தி மற்றும் எரிபொருளில் நீண்ட தூரத்தையும் கடக்கும். இதற்கு மாறாக, பிளக்-இன் ஹைப்ரிட் மின்சார வாகனங்கள் எவ்வளவு தூரம் இருந்தாலும், முதன்மையாக மின்சார சக்தியைப் பயன்படுத்துகின்றன.
நமது நாட்டின் பயணிகள் வாகன விற்பனையில் உ.பி., முக்கிய பங்கு வகிக்கிறது. ஆட்டோ டீலர்கள் சங்கமான ‘பாடா’வின் தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் பாதியில் மாநிலத்தில் 2.36 லட்சம் பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 13.46 சதவீதம் அதிகமாகும். காலாண்டு அடிப்படையில், கடந்த ஆண்டை விட நடப்பு ஜூன் காலாண்டில் மாநிலத்தில் பயணிகள் வாகன விற்பனை 10.26 சதவீதம் அதிகரித்துள்ளது.
உ.பி அரசின் இந்த முடிவு சிறப்பானது; இது சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களின் பயன்பாட்டை மக்கள் மத்தியில் அதிகரிக்க உதவும் என வாகன ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மற்ற மாநிலங்களும் இதை பின்பற்றினால், தற்போது மந்தமாக உள்ள வாகன விற்பனை மேலும் உயரலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், உ.பி., அரசின் இந்த முடிவு, ‘மாருதி சுசூகி, ஹோண்டா, டொயோட்டா கிர்லோஸ்கர்’ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அரசு தள்ளுபடி மூலம், கார் வாங்குவோர் ரூ.1.50-3.50 லட்சம் வரை பயனடைவார்கள்.