திருமலை: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன், தாடேப்பள்ளியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று அக்கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் ஜெகன்மோகன் பேசுகையில், ”ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்பதால், சட்டசபை கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டசபைக்கு சென்றாலும், செல்லாவிட்டாலும், பொது பிரச்னைகளில் போராட வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. 2028 பிப்ரவரியில் திடீர் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்து வருகிறது. எனவே தேர்தலுக்கு தயாராக வேண்டும். ஏழைகளுக்கு கொடுத்த வீடுகளை அரசு திரும்பப் பெற முடியாது. இதுபோன்ற சம்பவங்கள் எங்காவது நடந்தால், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.