சென்னை: “விடாமுயற்சி” திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறாதிருந்தாலும், அஜித் மீது உள்ள ரசிகர்களின் அன்பும் நம்பிக்கையும் எந்த விதத்திலும் குறையாது என்பதற்கான உறுதியான உதாரணம், சமூக வலைதளங்களில் நடந்த டிரெண்டிங் என்று அவர்களின் கருத்து. விஜய் ரசிகர்கள் #தமிழகவெற்றிக்கழகம் ஹாஷ்டேக்கை பிரபலப்படுத்த முயன்ற நிலையில், அஜித் ரசிகர்கள் #GoodBadUglyTeaser ஹாஷ்டேக்கை அதிகளவில் பகிர்ந்து முதலிடத்தில் வைத்துள்ளனர்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் நடித்த “விடாமுயற்சி” திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியானது. இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், அஜித் மீது அன்பு கொண்ட உண்மையான ரசிகர்கள், அவருடைய அடுத்த படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் சமூக வலைதள டிரெண்டுகளில் அஜித் மற்றும் விஜய் தொடர்பான விஷயங்களே பெரும்பாலும் முதலிடங்களை பிடிக்கும். விஜய் தனது அரசியல் கட்சி தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியதை நினைவுகூரும் விதமாக, ரசிகர்கள் #தமிழகவெற்றிக்கழகம் ஹாஷ்டேக்கை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். ஆனால் அதே சமயம், அஜித் ரசிகர்கள் “குட் பேட் அக்லி” பட டீசர் பற்றிய அப்டேட் வந்ததிலிருந்து, அதற்கான ஹாஷ்டேக்கை அதிக அளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
“குட் பேட் அக்லி” பட டீசர் வரும் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அஜித் ரசிகர்கள் இதற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றனர். இது ஒருவகையில், “விடாமுயற்சி” படத்தால் ஏற்பட்ட ஏமாற்றத்திலிருந்து வெளிவந்து, அடுத்த படத்திற்காக உற்சாகத்துடன் காத்திருக்கிறார்கள்” என்பதையும் உறுதி செய்யிறது.
விஜய் ரசிகர்கள் உருவாக்கிய #தமிழகவெற்றிக்கழகம் 21,000க்கும் அதிகமான ட்வீட்களுடன் டாப் 2 இடத்தில் இருந்தாலும், அஜித் ரசிகர்களின் #GoodBadUglyTeaser ஹாஷ்டேக் 80,000 ட்வீட்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த நிலை, தமிழக வெற்றிக் கழகம் 2வது ஆண்டு விழாவில் விஜய் பேசியதும் மாறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மகா சிவராத்திரி கொண்டாட்டத்திற்கும் சமூகவலைதளங்களில் அதிக கவனம் இருக்கிறது. #Mahashivratri2025 ஹாஷ்டேக்கில் நாடு முழுவதும் சிவன் பக்தர்கள் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.