திருப்பதி : திருப்பதி மாநகராட்சி ஆணையர் மவுரியா நரபு ரெட்டி, திருப்பதி நகரின் சப்தகிரி நகர், யசோதா நகர், பிரசாந்த் நகர், ரயில்வே கழனி உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரம், பொறியியல், நகரமைப்பு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் நேற்று துப்புரவு பணிகளை ஆய்வு செய்து, மக்கள் குறைகளை கேட்டறிந்தார். பாதாள சாக்கடைகள் நிரம்பி வழிவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அப்போது, மாநகராட்சி கமிஷனர் மவுரியா கூறியதாவது:-
சாக்கடை கால்வாய்களில் குப்பை கொட்டப்படுவதால், சாக்கடைகள் தேங்கி, நிரம்பி வழிகின்றன. மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். பணியாளர்கள் குப்பையை கண்ட இடங்களில் கொட்டாமல் ஈரமான மற்றும் உலர் குப்பைகளை தனித்தனியாக வழங்க வேண்டும். கால்வாய்கள் மற்றும் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. துப்புரவு பணியாளர்கள் தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.
சாக்கடை கால்வாய்கள் எங்கும் நிரம்பி வழிந்தால், பணியாளர்கள் உடனடியாக சரி செய்ய வேண்டும். சுகாதாரத்தை பராமரிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றார். ஆய்வின் போது, கமிஷனருடன் கூடுதல் கமிஷனர் சரண் தேஜ் ரெட்டி, கண்காணிப்பு பொறியாளர் ஷியாம்சுந்தர், நகராட்சி பொறியாளர் கோமதி, சுகாதார அலுவலர் யுவா அன்வேஷ், வருவாய் அலுவலர் சேதுமாதவ், டிஇ பிரசாத், ஏசிபி மூர்த்தி, சர்வேயர் கோட்டேஸ்வரராவ், துப்புரவு மேற்பார்வையாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.