தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் வயர்மேன், கணக்காளர், கேங்மேன் உள்ளிட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக, 30,000 கேங்மேன் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் தற்போது பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. பல இடங்களில், மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய, பயிற்சி பெறாத தனியாரை அனுப்பி வைக்கின்றனர். அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
மின் கோளாறை சரிசெய்துவிட்டு, அதற்கு மின் நுகர்வோரிடம் கட்டணம் வசூலிப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இந்நிலையில், 30,000 கேங்மேன் பணியிடங்களை நிரப்ப வேண்டிய நிலையில், வெறும் 5,000 கேங்மேன்களை நிரப்ப, தமிழக அரசிடம் மின்சார வாரியம் அனுமதி கோரியுள்ளது. அந்த அனுமதியை வழங்கக்கூட அரசு தயங்குகிறது. அனுமதிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்புவதில் காலதாமதம் செய்வது கண்டிக்கத்தக்கது. மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி, தேவையான சேவையை வழங்காமல் இருப்பதை ஏற்க முடியாது.
இதே நிலை நீடித்தால் தடையில்லா மின்சாரம் வழங்குவது கேள்விக்குறியாகிவிடும். மின் தேவைக்கும் விநியோகத்துக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரித்து வருவதால், செலவைக் குறைக்க காலி பணியிடங்களை நிரப்புவதில் சிக்கனம் காட்டுவது நிர்வாகச் சீரழிவுக்கு வழிவகுக்கும். எனவே செயல்தலைவர் ஸ்டாலின் இதில் தனி கவனம் செலுத்தி மின் வாரியத்தில் உள்ள 30 ஆயிரம் கேங்மேன் பணியிடங்கள் மற்றும் இதர பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.