சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை:- தெலுங்கானாவில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் உட்பட மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது. ஆனால், மறுபுறம், தமிழைக் கட்டாயப் பயிற்று மொழியாக்குவதற்கான அரசாணை செல்லாது என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து 2000-ம் ஆண்டு தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது.
அதை விசாரணைக்கு கொண்டு வரவோ, தமிழை கட்டாய பயிற்று மொழியாக்கும் சட்டம் கொண்டு வரவோ அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தமிழுக்கு செய்யும் துரோகம். தாய்த் தமிழுக்கு மேலும் துரோகம் செய்யாமல், தமிழகத்தில் தமிழைக் கட்டாயப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் அமல்படுத்த தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.