மதுரை: மதுரையைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட அடைப்பைக் கண்டறிந்து சரி செய்யும் கருவியை வெறும் ரூ. 200 செலவில் கண்டறிந்துள்ளனர். இந்த குழாயில் அடைப்பு ஏற்பட்டால், ஓட்டை விழுந்து தண்ணீர் வெளியேறுவதால் தண்ணீர் வினியோகம் தடைபடுகிறது. இதனால், 5 அடிக்கு கீழ் பள்ளத்தில் உள்ள குழாயில் எந்த இடத்தில் பிரச்னை உள்ளது என ஊழியர்கள் போராடுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகள் தங்க மீனாட்சி, யாசினி, அனன்யா யாழினி, பவிதாரிணி ஆகியோர் குடிநீர் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை கண்டறிந்து சரி செய்யும் கருவியை வடிவமைத்துள்ளனர்.
மாணவர்களின் இந்த முயற்சியை பள்ளி முதல்வர் லட்சுமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். இக்கருவி குறித்து மாணவர்கள் கூறுகையில், ”மாணவர் பயிற்சியாளர் அப்துல் ரசாக் வழிகாட்டுதலின்படி, ‘குடிநீர் பைப் லைன் பிளாக் இன்டிகேட்டர்’ என்ற கருவியை வடிவமைத்துள்ளோம். இதன் அடிப்படையில், தண்ணீர் குழாயின் உள்ளே, நூறு அடிக்கு ஒரு மிதவை சுவிட்ச் நிறுவப்பட வேண்டும். இதிலிருந்து இரண்டு கம்பிகளை வெளியே எடுத்து, ஒரு லைட், ஒரு பஸர், ஒரு சுவிட்ச் மற்றும் 9 வோல்ட் பேட்டரி ஆகியவற்றை 4 X 4 இன்ச் பெட்டியில் வைத்து மேலே இழுத்து சுவரில் பொருத்த வேண்டும்.
தரைக்கு கீழே உள்ள மிதவை சுவிட்ச் சப்ளை தடுக்கப்பட்ட இடத்திற்கு கீழே சரியும். இதனால், மேலே உள்ள பெட்டியில் உள்ள சுவிட்சை ஆன் செய்தால், விளக்கு எரிந்து, பஸர் ஒலிக்கும். இதன் மூலம், அடைப்பை எளிதாக கண்டறிந்து சரி செய்யலாம்” என்றார். இந்நிலையில், இந்த கண்டுபிடிப்பு குறித்து தகவல் அறிந்த மதுரை மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன், மாணவர்களை நேரில் அழைத்து பேசினார். அவர்களுக்கு இந்த புதிய சாதனம் குறித்து மாணவர்கள் நேரலை விளக்கம் அளித்தனர். இதையடுத்து, மாணவர்களை கமிஷனர் வெகுவாக பாராட்டினார். இக்கருவியை சோதனை அடிப்படையில் பயன்படுத்துமாறு கமிஷனரிடம் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.