புதுடெல்லி: தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. முதல் நூறு யூனிட் மின்சாரத்திற்கு அரசு மானியம் வழங்குகிறது. இந்த மானியம் பெற மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற அரசு உத்தரவும் அக்டோபர் 6-ம் தேதி வெளியிடப்பட்டது. வழக்கறிஞர் எம்.எல் ரவி என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், உயர்நீதிமன்றம் முன்பு வழங்கிய உத்தரவை மறுஆய்வு செய்து நிவாரணம் கோரி உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது. இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றமும் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை வழக்கறிஞர் எம்.எல். ரவி மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த விவகாரத்தில் எங்கள் தரப்பு கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று மனுதாரர் கூறினார். ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற அரசு உத்தரவு மாநில அரசின் கொள்கையாகும். அதில் தலையிட விரும்பவில்லை” என்று கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.