வாஷிங்டன் : அமெரிக்காவில் 80,000 அரசு பணியிடங்களை ரத்து செய்ய அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இது முன்னாள் ராணுவத்தினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்றவுடன் ‘அரசு செயல் திறன்’ (டிஓடிஜி) என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக தொழிலதிபர் எலான் மஸ்க் பதவி வகிக்கிறார்.
டிஓடிஜி துறையின் பரிந்துரைகளின்படி அமெரிக்க அரசின் செலவினங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கான துறையில் 80,000 அரசு பணியிடங்களை ரத்து செய்ய அதிபர் ட்ரம்ப் அரசு முடிவு செய்துள்ளது.
இந்த துறையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் வேலை இழப்பார்கள் என்று தெரிகிறது. மேலும் இந்த துறைக்கான நிதி ஒதுக்கீட்டை கணிசமாக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதிபர் ட்ரம்பின் முடிவுகள் குறித்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.