புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கையில் முறைகேடு செய்ததாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா மீது அமலாக்க இயக்குனரகம் மற்றும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்குகளில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் கரோல், சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்நிலையில் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சஞ்சய்குமார் அறிவித்துள்ளார். நீதிபதி சஞ்சீவ்கன்னா, “எங்கள் சகோதரருக்கு சில சிரமங்கள் உள்ளன.
தனிப்பட்ட காரணங்களால், இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையில் அவர் பங்கேற்கவில்லை,” என்றார். சிசோடியா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி, “இந்த வழக்கை அவசர வழக்காகப் பட்டியலிடக் கோரப்பட்டுள்ளதால் கால அவகாசம் முக்கியமானது. இரண்டு வழக்குகளிலும் விசாரணை தொடங்கவில்லை” என்று நீதிபதி அமர்விடம் கூறினார்.
இதையடுத்து, இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை மற்றொரு அமர்வு ஜூலை 15ஆம் தேதி நடத்தும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.