அவனியாபுரம்: திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று சென்னையில் இருந்து மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவரிடம் நிருபர்கள், ‘பாஜகவுடன் கூட்டணி அமைக்க மற்ற கட்சிகள் தயக்கம் காட்டுவதாக அண்ணாமலை தெரிவித்தாரா?’ என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:- அவர்களின் கருத்துகளுக்கு என்னால் பதிலளிக்க முடியாது. மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதற்கு நம்மால் பதில் சொல்ல முடியாது.
தற்சமயம் நம் தமிழகத்தில் உள்ள முக்கியமான மூன்று பிரச்சனைகள் மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு, மீனவர் பிரச்சினை. தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் தமிழ் நமது தாய்மொழி, நமது உயிர் மொழி. தமிழகம் முழுவதும் நம் தாய்மொழியை கட்டாயமாக்க வேண்டும். அனைவரும் தமிழ் படிக்க வேண்டும். அதுதான் தேமுதிகவின் நிலைப்பாடு. தாய்மொழியைக் காப்போம், அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்வோம் என்பது விஜயகாந்தின் வார்த்தைகள்.

அதுதான் தேமுதிகவின் நிலைப்பாடு. தமிழகத்தில் லோக்சபா தொகுதி குறைக்கப்படும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனவே அதுபற்றி நான் எதுவும் கூறவில்லை. எங்களின் எம்பி தொகுதிகளை குறைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டால், தமிழக அரசுடன் இணைந்து தமிழகத்திற்காகவும், தமிழக மக்களுக்காகவும் போராடுவது உறுதி. மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
பிரதமர் மோடி இலங்கை செல்லும் போது மீனவர்களுக்கு எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில் உறுதியான ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும். மீனவர்களுக்கு அனைத்து வகையிலும் பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து கேட்ட கேள்விக்கு, ‘அ.தி.மு.க.வில் ராஜ்யசபா சீட், தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறதே?
இதனால் கூட்டணி உடைக்க வாய்ப்பு உள்ளதா?’ என்றவர், ‘தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. இப்போது எதுவும் சொல்ல முடியாது. எந்த கணிப்பும் செய்ய முடியாது. காத்திருங்கள். அந்த நேரம் வரும்போது கண்டிப்பாக தெரிவிப்பேன் என்றார். 2026-ல் அதிமுக-தேமுதிக-பாஜக கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதா? நேரம் வரும்போது அதற்கான அறிவிப்புகள் கண்டிப்பாக வெளியிடப்படும் என்றார். “ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அ.தி.மு.க.,வுடன் ஏதாவது அதிருப்தி உள்ளதா? நல்லுறவு தொடர்கிறதா?” அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.