சென்னை: சென்னை உட்பட ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் அனைத்து மைதானங்களிலும் விளையாட்டு அரங்குகள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பின் போது மது மற்றும் புகையிலை விளம்பரங்களை ஐபிஎல் அமைப்பு தடை செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்தியாவில் வரும் 22-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டிகளின் போது விளையாட்டு அரங்குகள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புகளின் போது மது மற்றும் புகையிலை விளம்பரங்களை அனுமதிக்க கூடாது என ஐபிஎல் நிர்வாகத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மக்கள் நலன் கருதி மத்திய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. விளம்பரம் இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகத்தின், சுகாதார சேவைகள் இயக்குனர் ஜெனரல், அருண் சிங் துமால், ஐ.பி.எல்., அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை மிகவும் பொருத்தமானது. கிரிக்கெட் போட்டிகள் மூலம் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான மறைமுக விளம்பரங்களை திணிப்பதை பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பசுமை தாயகம் அமைப்பு தொடர்ந்து எதிர்த்து வருகின்றன.

இது தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் கிரிக்கெட் வாரியங்களுக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளேன். பசுமை தாயகம் அமைப்பினர் கிரிக்கெட் ஸ்டேடியம் முன்பு பல சுற்று போராட்டங்களை நடத்தினர். “இந்தியா ஒரு விளையாட்டு நாடாக வளர்ந்து வருகிறது. விளையாட்டைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதை உறுதிப்படுத்துகிறது. விளையாட்டு ரசிகர்கள் விளையாட்டு அணிகள் மற்றும் வீரர்கள் மீது தங்கள் அன்பையும் விசுவாசத்தையும் வெறித்தனமாக வெளிப்படுத்துகிறார்கள். புகைபிடிக்காத புகையிலை நிறுவனங்கள் இளைஞர்களின் விளையாட்டின் மீதான ஆர்வத்தை தங்கள் தயாரிப்புகளுக்குத் தள்ளுவதற்கான வாய்ப்பாகக் கருதுகின்றன.
இதைத் தடுக்க விளம்பரம், விளம்பர நடவடிக்கைகள் மற்றும் புகையிலைப் பொருட்களின் ஸ்பான்சர்ஷிப் ஆகியவற்றுக்கு முழுத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். மத்திய அரசும் இதே கருத்தை வலியுறுத்தியிருப்பது பாமகவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். மத்திய அரசின் உத்தரவை ஐபிஎல் அமைப்பினர் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சென்னை உட்பட ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் அனைத்து மைதானங்களிலும் விளையாட்டு அரங்குகள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பின் போது மது மற்றும் புகையிலை தொடர்பான விளம்பரங்களை ஐபிஎல் அமைப்பு தடை செய்ய வேண்டும்” என்றார்.