பெங்களூரு: வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மத்திய தொழிலாளர் துறை இணை அமைச்சர் ஷோபா கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
கர்நாடக வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த ஊழல் தொடர்பாக சந்திரசேகர் என்ற அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். யூனியன் வங்கியும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது. கர்நாடக வால்மீகி மேம்பாட்டு ஆணையம் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது.
ஆனால், அரசு ஒதுக்கிய நிதியை தவறாக பயன்படுத்தியுள்ளனர். சந்திரசேகரின் தற்கொலை, ஊழலில் அவர் எதிர்கொண்ட கடுமையான அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்களின் அறிகுறியாகும்.
அவரது அகால மரணத்திற்கு காரணமான காரணிகள் குறித்து வெளிப்படையான மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஊழலில் ஈடுபட்ட யூனியன் வங்கி மற்றும் பிற நிறுவனங்களின் பங்கு குறித்து விசாரிக்க சிபிஐ உதவ வேண்டும். சந்திரசேகர் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.