பிரதமர் நரேந்திர மோடி நேற்று மொரீஷியஸ் தலைநகர் போர்ட் லூயிஸ் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. போர்ட் லூயிஸ் நகரில் இன்று நடைபெறும் மொரீஷியஸ் சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்கிறார். மொரீஷியஸ் தீவு நாடு ஆப்பிரிக்கக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஆப்பிரிக்காவின் சிங்கப்பூர் என்று அழைக்கப்படுகிறது.
மொரீஷியஸ் 1715-ல் பிரான்சால் ஆக்கிரமிக்கப்பட்டது. 1803 மற்றும் 1815-ம் ஆண்டு போர்களில் மொரிஷியஸை பிரிட்டன் பிரான்சிடம் இருந்து கைப்பற்றியது. 1834 முதல் 1924 வரை இந்தியாவில் பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் கப்பல்கள் மூலம் மொரீஷியஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மார்ச் 12, 1968 அன்று மொரீஷியஸ் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. இந்த நாள் தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது.

தற்போது, சுமார் 1.3 மில்லியன் மக்கள் மொரீஷியஸில் வாழ்கின்றனர். இதில் 70 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர். இவர்களில் 12 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மொரிஷியஸ் நாட்டு கரன்சி நோட்டுகள் ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளன. இந்நிலையில், மொரீஷியஸ் நாட்டின் 57-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று அந்நாட்டுக்கு சென்றார்.
மொரிஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம், தலைநகர் போர்ட் லூயிஸ் விமான நிலையத்திற்கு நேரில் வந்து பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தார். பீகாரைச் சேர்ந்த மொரிஷியஸ் பெண்கள், போஜ்புரி பாடலான கீத் கவாய் பாடி பிரதமர் மோடியை வரவேற்றனர். பின்னர் சிவசாகர் ராம்கூலம் தாவரவியல் பூங்காவில் இரு நாட்டு பிரதமர்களும் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர்.
தலைநகர் போர்ட் லூயிஸில் இன்று நடைபெறும் மொரீஷியஸ் சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களின் சாதனைகளும் நிகழ்வில் இடம்பெறும். மொரீஷியஸில் இந்திய அரசின் நிதியுதவியுடன் கால்பந்து மைதானங்கள் உட்பட 20 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.