புதுடெல்லி: டெல்லியில் விளம்பர பலகைகள் வைக்க அரசு நிதியை தவறாக பயன்படுத்திய புகாரில் முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது. 2019-ம் ஆண்டில், டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின் போது, துவாரகா முழுவதும் பெரிய விளம்பர பலகைகள் வைக்கப்பட்டன. இதை எதிர்த்து டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அப்போதைய முதல்வர் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ குலாப் சிங் மற்றும் துவாரகா கவுன்சிலர் நித்திகா சர்மா ஆகியோருடன் சேர்ந்து அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக புகார் கூறப்பட்டது. ஆனால், புகார் குறித்து போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, இந்தப் புகார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் செப்டம்பர் 2022-ல் தள்ளுபடி செய்தார்.

இதை எதிர்த்து டெல்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில், கடந்த ஜனவரி மாதம் கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை செஷன்ஸ் நீதிமன்றம் ரத்து செய்தது. மனுவை மறுபரிசீலனை செய்ய கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக சிறப்பு நீதிபதி விஷால் காக்னே தனது உத்தரவில், “குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு உகந்ததா என்பதை கீழ் நீதிமன்றம் கண்டறிய முயற்சிக்கவில்லை” என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156 (3)ன் கீழ் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த பெருநகர மாஜிஸ்திரேட், அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்ய நேற்று அனுமதி அளித்தார். மேலும், இந்த உத்தரவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மார்ச் 18-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.