கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுடன் தொலைபேசியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை செய்ய எதிர்ப்புத் தெரிவித்து, சென்னையில் கடந்த 5-ஆம் தேதி தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நாடாளுமன்றத்தில் எம்.பி.,-க்களைக் கொண்ட தென் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களில் உள்ள கட்சித் தலைவர்களை சந்திக்க திமுக சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு, தற்போது அடுத்தடுத்து சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன.
அந்த நிலையில், பெங்களூரு சென்ற அமைச்சர் பொன்முடி, திமுக எம்பி அப்துல்லா ஆகியோர் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சந்தித்துப் பேசினர். தென் மாநில அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை ஒப்படைத்தனர். அப்போது, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுடன் தொலைபேசி வாயிலாக உரையாடிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.
ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும், கூட்டாட்சிக்கு எதிரான மத்திய அரசின் கொள்கைகளை எதிர்க்க கர்நாடக அரசு முழு ஆதரவு அளிக்கும் என உறுதி அளித்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, தொகுதி மறுசீரமைப்பு மட்டுமின்றி, தென் மாநில மக்களின் நலனைப் பாதிக்கும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரையும், அமைச்சர் பொன்முடி, எம்.பி., அப்துல்லா ஆகியோர் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வதாக கர்நாடக தரப்பில் உறுதி அளித்திருப்பதாகத் தெரிவித்தார்.
இதன்பின்னர், ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்தார்.
இதேபோல், டெல்லியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி., டெரிக் ஓ பிரையனை சந்தித்த திமுக எம்.பி., கனிமொழி சோமு, சென்னையில் வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.