ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களில் எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என்பது குறித்து ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐஎம் பெங்களூரு இணைந்து ஆய்வு நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆய்வுகள் முடிந்து அறிக்கை சமர்பிப்பதில் தாமதம் ஏற்படும் என்பதால், கோடை விடுமுறையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அனுமதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சுற்றுலா வாகனங்கள் குறித்து விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான மூத்த தமிழக வழக்கறிஞர் பி.எஸ். ராமன் கோடை விடுமுறையில் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கொடைக்கானல் மலைப்பகுதியில் 50 இருக்கைகள் கொண்ட பேருந்துகளை இயக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தடை விதித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

ஊட்டி மற்றும் கொடைக்கானலில் எத்தனை வாகனங்களை இயக்கலாம் என்பது குறித்து ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐஎம் பெங்களூரு நடத்தும் ஆய்வுகள் முடிவடைய இன்னும் 9 மாதங்கள் ஆகும் என்றார். அதைத் தொடர்ந்து நீதிபதிகள், ”வரும் கோடை சீசனில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்தவும், ஐஐடி, ஐஐஎம் ஆய்வு முடிவுகள் வரும் வரை, ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறோம்.
அதன்படி தற்போதுள்ள இ-பாஸ் நடைமுறையின்படி வார நாட்களில் தினமும் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்கள் மட்டுமே ஊட்டிக்கு அனுமதிக்கப்பட வேண்டும். வார இறுதி நாட்கள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினமும் 8 ஆயிரம் வாகனங்களை அனுமதிக்கலாம். அதேபோல், வார நாட்களில் 4,000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6,000 வாகனங்களும் மட்டுமே கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். உள்ளூர் வாகனங்கள் மற்றும் விவசாய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இந்த கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அரசு பஸ்கள் மற்றும் ரயில்கள் மூலம் ஊட்டி, கொடைக்கானல் செல்லும் பயணிகளுக்கு எந்த தடையும் இல்லை. சுற்றுலா வாகனங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டுப்பாடுகளை, ஏப்., 1 முதல் ஜூன் 30 வரை, மாவட்ட நிர்வாகங்கள் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். செயல்படுத்துவது குறித்த அறிக்கையை, ஏப்., 25-ல் தாக்கல் செய்ய வேண்டும். இந்த புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த, கூடுதல் போலீசாரையும் நியமிக்க வேண்டும். இ-பாஸ் வழங்கும் பணியில் ஊட்டி, கொடைக்கானல் செல்லும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணை ஏப்ரல் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.