மாஸ்கோ: முன்னதாக, சவுதி அரேபியாவில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் ஒப்புக்கொண்டது. ரஷ்யாவுடன் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட உக்ரைனும் ஒப்புக்கொண்டது. போர் நிறுத்த உடன்படிக்கையானது தரை, கடல் மற்றும் வான்வழித் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு கோருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதினும் போர் நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
எனினும் அவர் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார் புதின். அப்போது அவர், “ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயற்சித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரேசில் அதிபர் லூலா டா சில்வா ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களின் உன்னத நோக்கம் வெறுப்பு மற்றும் உயிர் இழப்புகளை முடிவுக்குக் கொண்டுவருவதாகும். சவூதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தையின் போது அமெரிக்காவின் அழுத்தத்தின் பேரில் உக்ரைன் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக மேலோட்டமாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில், உக்ரைன் தான் போர்நிறுத்தத்தைக் கொண்டுவர அமெரிக்கத் தரப்பை வலியுறுத்தியிருக்க வேண்டும். கள நிலவரங்கள் அதைக் கோருவதற்கான சூழலை உருவாக்கியுள்ளது.
போர் நிறுத்தத்திற்கான அமெரிக்காவின் முன்மொழிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அதற்கு முன், சில பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அமெரிக்கா மற்றும் நமது நட்பு நாடுகளுடன் இதைப் பற்றி விவாதிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் அமெரிக்க அதிபர் டிரம்புடன் தொலைபேசி உரையாடலை எதிர்பார்க்கிறேன். இந்தப் போர்நிறுத்தம் நீண்ட கால அமைதிக்கான விதையாக இருக்க வேண்டும். ரஷ்யாவின் கர்ஸ்க் பகுதியில் உக்ரைன் படைகள் உள்ளன.
இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன், அங்குள்ள ராணுவத்தினர் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும். அதேபோல், அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்க வலுவான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். ஒட்டுமொத்தமாக இந்தப் போர்நிறுத்த உடன்படிக்கையானது பிரச்சினையின் மூலத்தைக் கண்டறிந்து பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்” என்று அவர் கூறினார்.