லாகூர்: 18-வது ஐபிஎல் சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் உலக அளவில் நடைபெறும் முக்கியமான விளையாட்டுத் தொடராகும். ஐபிஎல் என்பது உள்நாடு மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் கூடும் ஒரு தளமாகும். இது குறித்து இன்சமாம் பேசியுள்ளார். “உலக கிரிக்கெட்டில் உள்ள அனைத்து சிறந்த வீரர்களும் ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்கின்றனர்.
ஆனால் மற்ற நாடுகளில் நடைபெறும் லீக் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்பதில்லை. எனவே, அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் நாட்டு வீரர்களை ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்பதை தடுக்க வேண்டும். மற்ற நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் லீக்குகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படாதபோது, மற்ற நாடுகளின் வாரியங்களும் அவ்வாறே செய்ய வேண்டும், ”என்று இன்சமாம் கூறினார்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகுதான் தற்போது மற்ற நாடுகளில் நடைபெறும் லீக் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க முடியும். அந்த வகையில் இந்திய வீரர்கள் யுவராஜ் சிங், இர்பான் பதான், தினேஷ் கார்த்திக் ஆகியோர் ஓய்வு பெற்ற பிறகுதான் வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் விளையாடினர். இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் அதே நேரத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியும் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.