சென்னை: சத்துணவு ஊழியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படியுடன் பணி ஓய்வு வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் சென்னை மாவட்ட அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.முத்துலிங்கம் தலைமை வகித்தார். போராட்டம் குறித்து, சங்க பொருளாளர் இந்திராணி கூறியதாவது:- இன்றைய நிலையில், 2,000 ரூபாய் ஓய்வூதியத்தில் வாழ முடியாத நிலை உள்ளது. எனவே, அகவிலைப்படி, 6,750 ரூபாய் ஓய்வூதியம் வழங்கக் கோரி, 8 ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். இதுவரை, எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.