தஞ்சாவூர்: டெல்டா பிராந்தியத்தில் முதன்முறையாக இம்பெல்லா இதய பம்பின் உதவியுடன் 70 வயது முதியவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையை வெற்றிகரமாக அளித்து சாதனை படைத்துள்ளது தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை.
தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரை மாநகரங்களுக்கு வெளியே, இம்பெல்லா மெக்கானிக்கல் இதய பம்ப் உதவியுடன் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செயல்முறையை மேற்கொண்டிருக்கும் முதல் மருத்துவமனை என்ற பெருமையை தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை. காவிரி டெல்டா பிராந்தியத்தில், உலகின் மிகச்சிறிய இதய பம்ப் உதவியோடு இம்மருத்துவச் செயல்முறையை வெற்றிகரமாக மீனாட்சி மருத்துவமனை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது. சிகிச்சை செயல்முறை நெடுகிலும் நோயாளிக்கு தற்காலிக இரத்தச் சுழற்சி ஆதரவை இம்பெல்லா கருவி வழங்கியபோது, கடுமையான இதய செயலிழப்பால் அவதிப்பட்ட ஒரு நோயாளிக்கு கால்சியம் படிமங்களை அகற்றி மூன்று ஸ்டென்ட்களை பொருத்தும் பணியை மருத்துவ நிபுணர்கள் வெற்றிகரமாக செய்து மருத்துவ உலகில் சாதனை படைத்துள்ளனர்.
இதயவியல் துறையின் தலைவர் மற்றும் முதுநிலை சிறப்பு நிபுணருமான டாக்டர். B. கேசவமூர்த்தி தலைமையிலான மருத்துவக்குழுவில் இதயவியல் சிறப்பு மருத்துவர் டாக்டர். P. சபரிகிருஷ்ணன், இதயவியல் துறையின் முதுநிலை சிறப்பு மருத்துவர் டாக்டர். A. ஸ்ரீனிவாசன் மற்றும் இதயம் சார்ந்த மயக்கமருந்தியல் துறை நிபுணர் டாக்டர். சென்ன கேசவலு ஆகியோர் இடம்பெற்று சிறப்பான பங்களிப்பை வழங்கினர்.
இம்பெல்லா என்பது ஒரு பொறியியல் சார்ந்த இதய பம்பாகும்; இதயத்திலிருந்து இரத்தத்தை பம்ப் செய்து உடலின் பிற உறுப்புகளுக்கு அனுப்புவதற்கு தற்காலிகமாக உதவும் பம்பாக இது செயல்படுகிறது. மருத்துவச் செயல்முறை மேற்கொள்ளப்படும் நேரத்திலும் மற்றும் அதற்கு பிறகு உடனடியாகவும் இதயத்திலிருந்து இரத்தத்தை இக்கருவி பம்ப் செய்வதன் மூலம் சிக்கலான ஆஞ்சியோபிளாஸ்டி செயல்முறையின்போது பாதுகாப்பை மேம்படுத்துகிறது; இதன் மூலம் இதயம் ஓய்வெடுக்கவும், இயல்பு நிலைக்குத் திரும்பவும் உதவுகிறது. மிக முக்கியமான குருதியியக்க ஸ்திரத்தன்மையை இந்த இயங்குமுறை வழங்குகிறது. நிலையாக இரத்தம் இதயத்திற்கு செல்வதும் மற்றும் அனைத்து உறுப்புகளின் இயல்பான இயக்கங்களுக்கு ஆதரவாக இதயமும், இரத்தநாளங்களும் பராமரிக்கப்படும் நிலையையே இது குறிக்கிறது.
இந்த சிகிச்சை செயல்முறைக்கு பிறகு இம்பெல்லா நோயாளியிடமிருந்து அகற்றப்பட்டது. அதன்பிறகு முழுமையாக மீண்டு குணமடைந்திருக்கும் இந்நோயாளி இப்போது அவர் இயல்பான வாழ்க்கையை மீண்டும் சுறுசுறுப்பாக தொடங்க முழுமையான தகுதியோடு இருக்கிறார். வெறும் 3 மில்லிமீட்டர் ஆர அளவையேக் கொண்டிருக்கும் இந்த இதய பம்ப்பை பொருத்துவதும் மற்றும் அகற்றுவதும் இடுப்புக் கவட்டை தமனி வழியாக மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இதயவியல் துறை தலைவரும் மற்றும் முதுநிலை சிறப்பு நிபுணருமான டாக்டர். B. கேசவமூர்த்தி கூறியதாவது: “இதய சிகிச்சை செயல்முறையின் பாதுகாப்பையும், விளைவுகளையும் கணிசமாக மேம்படுத்தக்கூடிய இம்பெல்லா போன்ற மிக நவீன தொழில்நுட்பத்தை டெல்டா பிராந்தியத்தில் அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறோம். தமனியில் கடுமையான அடைப்புகள் அல்லது அளவுக்கதிகமாக கால்சிய படிமங்கள் போன்ற காரணிகளினால் நோயாளியின் இதயம் மிகவும் பலவீனமாக இருக்கும் நேர்வுகளில் இதயம் செயல்பாட்டை நிறுத்திவிடக்கூடும். இதன் மூலம் உயிரிழப்பு போன்ற கடுமையான விளைவுகள் ஏற்படலாம்.
சிக்கலான ஆஞ்சியோபிளாஸ்டி செயல்முறைகள் கூட இதயத்தின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே இத்தகைய நேரங்களில் இம்பெல்லா பம்ப் கருவியை பயன்படுத்தும்போது அது இதயத்தின் செயல்பாட்டை தற்காலிகமாக தன்வசம் எடுத்துக்கொள்கிறது. இதனால் அறுவைசிகிச்சையின்போது உயிரிழப்பு ஏற்படும் இடர்வாய்ப்பை இது பெருமளவு குறைக்கிறது. சிகிச்சை செயல்முறையின்போது இதயம் ஓய்வெடுக்க இது அனுமதிக்கிறது. அவசியமாக இருக்குமானால், சிகிச்சை செயல்முறைக்கு பிறகு ஏழு நாட்கள் வரை இந்த பம்ப் இதயத்திற்கு ஆதரவளிப்பதை தொடரக்கூடும் என்றார்.
இதயவியல் துறை சிறப்பு நிபுணரான டாக்டர். P. சபரிகிருஷ்ணன் பேசுகையில், “தமனியில் அடைப்புகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தும் பாரம்பரியமான அணுகுமுறையில் தமனி சுவருக்கு எதிராக கால்சிய படிமங்களை அழுத்தி சுருங்குவதற்கு ஒரு சிறிய பலூன் பயன்படுத்தப்படும் மற்றும் இதயத்தசைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும் மற்றும் இரத்தநாளத்தை திறந்த நிலையில் வைப்பதற்கும் ஒரு ஸ்டென்ட் பொருத்தப்படும். எனினும் இதய செயல்பாடு மோசமாக இருக்கிற நோயாளிகளில் சிகிச்சை செயல்முறையின்போது இதயம் செயல்படுவது நின்று விடக்கூடும்.
இந்த பாரம்பரிய அணுகுமுறைக்கு மாறாக இடது இதயக்கீழறையிலிருந்து இரத்தத்தை பெருந்தமனிக்கு இரத்தத்தை பம்ப் செய்வதன் மூலம் இம்பெல்லா கருவி இதயத்திற்கு தீவிர ஆதரவளிக்கிறது. இதன் மூலம் இதயத்தின் பணிச்சுமை குறைக்கப்படுவதுடன் உடலின் இன்றியமையா உறுப்புகளுக்கு தொடர்ச்சியான இரத்த ஓட்டம் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. உடலின் பெரிய தமனி/குருதிக்குழாய் வழியாக இக்கருவி உட்செலுத்தப்பட்டு இதயத்தின் இடது கீழறைக்கு கொண்டு செல்லப்படும். வழக்கமாக காலில் தொடைத் தமனி வழியாக இது மேற்கொள்ளப்படுகிறது” என்று விளக்கமளித்தார்.
குறிப்பாக நீரிழிவு, இதயச் செயலிழப்பு, முதிர்ந்த வயது, கடுமையான பம்ப் செயலிழப்பு, சிக்கலான உறுப்புக் கோளாறுகள், அல்லது இதற்கு முன்னதாக பைபாஸ் அறுவைசிகிச்சைகள் செய்திருக்கும் வரலாறு போன்ற கூடுதல் இடர்காரணிகள் இருக்கும் நோயாளிகளுக்கு இம்பெல்லா பம்ப்-ஐ பயன்படுத்துவது சிறந்தது.