திருச்சுழி : நரிக்குடியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு ஒன்றிய அலுவலகம், காவல் நிலையம் போன்ற அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் நரிக்குடி சாலையில் அதிகளவில் நாய்கள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். குப்பை கிடங்குகள், குப்பை தொட்டிகள், இறைச்சி கடைகள் மற்றும் தெருக்களில் அதிக அளவில் சுற்றித் திரிகின்றனர்.
நரிக்குடியிலிருந்து திருப்புவனம் செல்லும் சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நாய்களை கண்டால் பீதியில் ஓட வேண்டிய நிலை உள்ளது. மேலும், மானூர், உலகுடி உள்ளிட்ட கிராமங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன் மானூர் கிராமத்தில் புகுந்த வெறிநாய், எட்டுக்கும் மேற்பட்டோரை கடித்தது.

காயமடைந்தவர்கள் நரிக்குடி மற்றும் திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது. வாகனங்களில் செல்லும் போது நாய்கள் துரத்துவதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் தடுமாறி கீழே விழுந்து காயமடையும் சம்பவங்களும் உள்ளன.
எனவே, ரோட்டில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.