கிறிஸ்ட்சர்ச்: பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.4 ஓவர்களில் 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக குஷ்தில் ஷா 32 ரன்களும், கேப்டன் சல்மான் ஆகா 18 ரன்களும், ஜகன்தத் கான் 17 ரன்களும் எடுத்தனர்.
வேறு எந்த பேட்ஸ்மேனும் இரட்டை இலக்கை எட்டவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் முகமது ஹாரிஸ் மற்றும் ஹசன் நவாஸ் ஆகியோர் முதல் 8 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த இர்பான் கான் 1 ரன்னிலும், ஷதாப் கான் 3 ரன்களிலும் 4.4 ஓவரில் 11 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர், ஆனால் அதன் பிறகு பாகிஸ்தானால் மீள முடியவில்லை.

நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி 4 விக்கெட்டுகளையும், கைல் ஜேமிசன் 3 விக்கெட்டுகளையும், இஷ் சோதி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். எளிதான இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 10.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்தது. டிம் ஷீபர்ட் 29 பந்துகளில் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஃபின் ஆலன் 29 ரன்களுடனும், டிம் ராபின்சன் 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி டூனிடின் வரும் 18-ம் தேதி நடக்கிறது.