சென்னை: இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரசுத்துறையில் உள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களின் முதியோர் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சமூக பாதுகாப்பு திட்ட சிறப்பு ஓய்வூதியத்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிமுகப்படுத்தினார். ஆனால், இன்றைய சூழலில் அந்த சிறப்பு ஓய்வூதியம் ரூ. 2,000 பசியை சமாளிக்க கூட உதவாது. தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஓய்வூதிய உயர்வு கோரி நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை முறைப்படுத்த திமுக அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் உங்கள் அரசின் கடந்த பட்ஜெட் அறிவிப்பில் கூட எங்களின் கோரிக்கை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. இதே அரசு, வருவாய் கிராம உதவியாளருக்கு, 5,500 ரூபாயும், கோவில் பூசாரிக்கு, 4,000 ரூபாயும், போலீஸ் மோப்ப நாய்க்கு, 10,000 ரூபாயும் ஓய்வூதியமாக வழங்கியுள்ளது.

ஆனால், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு ‘கலைஞர் உரிமைத்தொகை’ கூட வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாத தமிழக அரசின் வஞ்சகப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். எனவே, சத்துணவுப் பணியாளர்களுக்கு சிறப்பு ஓய்வூதியமாக ரூ.6,750 உயர்த்தி வழங்கக் கோரி, ஏப்., 24-ல், சென்னை, காமராஜர் சாலையில் உள்ள, சமூக நலத்துறை ஆணையரகத்தை முற்றுகையிட உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.