2019 நவம்பரில், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உத்தரபிரதேச மாநிலத்தை உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. இதைத் தொடர்ந்து, கோயில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. ஆகஸ்ட் 5, 2020 அன்று, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ஜனவரி 22, 2024 அன்று ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அன்றிலிருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதுகுறித்து, ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை பொதுச் செயலர் சம்பத் ராய் கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி துவங்கியதில் இருந்து, நகரின் பொருளாதாரம் அபரிமிதமாக வளர்ந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 10 மடங்குக்கும் அதிகமான பக்தர்கள் அயோத்திக்கு வந்துள்ளனர். பல புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அயோத்தி ஒரு முக்கிய ஆன்மீக சுற்றுலா தலமாக உருவெடுத்துள்ளது. அயோத்தி நகருக்கு மட்டுமின்றி அரசுக்கும் போதிய வருவாய் கிடைத்துள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பு, மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அலுவலகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கோயிலுக்குச் சென்றனர். அறக்கட்டளையின் வருமானம் மற்றும் செலவு விவரங்களை சரிபார்த்தனர். அப்போது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யுமாறு சிஏஜி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம்.
அவர்கள் ஆய்வு செய்து விரிவான அறிக்கையை சமீபத்தில் சமர்ப்பித்தனர். அதன்படி, பிப்ரவரி 5, 2020 முதல் பிப்ரவரி 5, 2025 வரை அயோத்தி ராமர் கோயில் நிர்வாகம் ரூ. 400 கோடி வரி செலுத்த வேண்டும். இதில் ரூ. 270 கோடி ஜிஎஸ்டி வரி. ரூ. 130 கோடி மற்ற வரிகள். கடந்த ஓராண்டில் மட்டும் 16 கோடி பக்தர்கள் அயோத்திக்கு வருகை தந்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நடைபெற்ற போது, தினமும் சுமார் 4.5 லட்சம் பக்தர்கள் அயோத்திக்கு வருகை தந்தனர். மகா கும்பமேளா நடந்த 45 நாட்களில் 1.25 கோடி பக்தர்கள் அயோத்திக்கு வருகை தந்துள்ளனர். இவ்வாறு சம்பத் ராய் தெரிவித்தார்.