மகாராஷ்டிராவில் உள்ள முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றுவோம் என இந்துத்துவா அமைப்புகள் அறிவித்துள்ளன. சத்ரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜியின் சரித்திரம் ‘சவ்வா’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. இது தொடர்பான விவாதம் மகாராஷ்டிர சட்டசபையின் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுந்தது. இதில் பேசிய சமாஜ்வாடி எம்எல்ஏ அபு ஹாஷ்மி, அவுரங்கசீப்பின் செயலை பாராட்டி ‘அவரது புகழ் வாழ்க’ என கோஷங்களை எழுப்பினார்.
இதனால், அவர் மார்ச் 26-ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சத்ரபதி சாம்பாஜி நகரில் உள்ள முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது. இதற்கு ஆதரவாக அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும் பேசினார். இந்நிலையில், விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) மாநில செயலாளர் கிஷோர் சவான், பஜ்ரங் தளம் மாநில ஒருங்கிணைப்பாளர் நிதின் மகாஜன் ஆகியோர் கூறுகையில், ”அவுரங்கசீப் சமாதியை அகற்றக்கோரி, முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸிடம் விரைவில் மனு அளிக்க உள்ளோம்.

இதற்காக மகாராஷ்டிராவில் விஎச்பி மற்றும் பஜ்ரங் தளம் சார்பில் நேற்று மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் இரு பிரிவுகளும், ஏக்நாத் ஷிண்டே மற்றும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் இந்த விவகாரத்தில் இந்துத்துவா அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்கு காங்கிரஸ் கட்சி மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மகாராஷ்டிர காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜய் வடேட்டிவார், “விஎச்பி மற்றும் பஜ்ரங் தளம் இனி ஒன்றும் செய்யவில்லை. மகாராஷ்டிரா மக்கள் நிம்மதியாக வாழ்வதை அவர்கள் விரும்பவில்லை. மாநிலத்தின் வளர்ச்சியின் வேகத்தை குறைக்க விரும்புகிறார்கள்” என்றார். இந்நிலையில் அவுரங்கசீப்பின் சமாதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.