சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அதிமுக கூட்டணியில் இணையலாம் என்ற தகவல்கள் பரவியுள்ள நிலையில், இதனை மறுத்து, அவருடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “தொழிற்சாலைகளுக்கான மின்கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி 100% உயர்வு, கடைகளுக்கு 150% உயர்வு, குடிநீர் வரி, பத்திரப்பதிவு கைட்லைன் மதிப்பு உயர்வு போன்றவை மக்களை கடுமையாக பாதித்துள்ளன. திமுக அரசு இந்த நான்காண்டு காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகளை மறைக்க, தொகுதி மறுசீரமைப்பு என்ற நாடகத்தை அரங்கேற்றி உள்ளது” என்று கூறினார்.

நாடாளுமன்றத்தில் திமுக போராட்டம் நடத்தியது என்பது ஒரு வடிவமைக்கப்பட்ட நாடகம் என்றும், மக்களின் கவனத்தை தவிர்த்துப் போகவே பல மாநில முதல்வர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்தி இருப்பதாகவும் பழனிசாமி குற்றம்சாட்டினார். “டாஸ்மாக்கில் 1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் திமுக அரசு ஊழலில் மூழ்கி உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. டாஸ்மாக் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.
பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் மது அருந்தும் சூழல் உள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை நடக்கிறது. திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாகிர் உசேன் தொழுகை முடித்து வீட்டுக்கு செல்லும் வழியில் வெட்டப்பட்டார். அவர் முன்பே புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கொலைக்கு முன்பு வீடியோ வெளியிட்டு உதவி கோரினார். ஆனால், இந்த அரசு அவரை பாதுகாக்கத் தவறிவிட்டது. இந்த ஆட்சியில் இன்று உயிரோடு இருப்பவர் நாளை இருப்பாரா என தெரியாத நிலை உள்ளது” என பழனிசாமி விமர்சித்தார்.
வேல்முருகனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அவரும் எங்களை அணுகவில்லை. நாங்களும் அவரிடம் பேச்சு நடத்தவில்லை” என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, கடந்த 20 ஆம் தேதி, வேல்முருகன் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் குறித்தும் பேசினார். அவரது கருத்துக்கு அதிமுக எம்.எல்.ஏ. ஆர்பி உதயகுமார் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தார். இதையடுத்து, வேல்முருகனின் கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.
இதனால் வேல்முருகன் ஆவேசமாக சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் சென்று முழக்கமிட்டார். இதனால் சபாநாயகர் அவை விதிகளை மீறி செயல்பட்டதாக வேல்முருகனை கண்டித்தார். இதை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினும், “சட்டப்பேரவையில் வேல்முருகன் அதிகப்பிரசங்கித்தனமாக நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது. இடத்தை விட்டு எழுந்து கூச்சல் போடுவது முறையல்ல. அவரின் மீது சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
இந்த சம்பவத்தால் வேல்முருகன் திமுக கூட்டணியில் தொடர்வாரா என்ற விவாதம் எழுந்தது. 2026 சட்டசபை தேர்தலில் அவர் அணி மாறக்கூடும் என்ற யூகங்களும் எழுந்தன. அவர் அதிமுக கூட்டணியில் இணையக்கூடும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், பழனிசாமி அந்த தகவலை மறுத்துள்ளார்.