சென்னை: புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளருக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜின் அண்ணன் மகன் இளமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். சாலைப்பணி ஒப்பந்தத்தில் தனக்குச் சாதகமாக செயல்பட அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் இளமுருகனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அரசு ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவே டெண்டர் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் அரசால் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒப்பந்தங்களை வழங்குவதில் ஊழல் நடைபெறக்கூடாது, அரசுக்குக் கூடுதல் செலவுகள் ஏற்படாமல் இருக்கவே இந்த நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், சிலர் குறுக்கு வழிகளை பயன்படுத்தி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அரசு ஒப்பந்தங்களைப் பெற முயற்சிக்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜின் அண்ணன் மகன் இளமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சிபிஐ அதிகாரிகள் இன்று காலை கைது செய்தனர்.
இந்த வழக்கின் பின்னணி குறித்து கூறும்போது, புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மற்றும் செயற்பொறியாளருக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. அரசு ஒப்பந்தத்தில் தங்களுக்குச் சாதகமாக செயல்பட அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ விசாரணையில் தெரியவந்தது.
ஏற்கனவே இந்த வழக்கில் புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், செயற்பொறியாளர் சிதம்பரநாதன், ஒப்பந்ததாரர் இளமுருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ நடத்திய விசாரணையில், ரூ.7.44 கோடி மதிப்புள்ள சாலை ஒப்பந்தப் பணியில் சாதகமாக கையெழுத்திட அதிகாரிகள் ஒரு சதவீதம் லஞ்சமாக ரூ.6 லட்சம் கேட்டதாக தெரியவந்தது.
அதில் முதலில் ரூ.2 லட்சம் லஞ்சமாக வழங்கப்பட்டபோது, சிபிஐ அதிகாரிகள் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.
தொடர்ந்து புதுச்சேரி அதிகாரிகளின் இல்லங்களில் நடந்த சோதனையில் சிபிஐ ரூ.73 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தது.
இந்நிலையில், இதே வழக்கில் தொடர்புடையதாக அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜின் உறவினர் இளமுருகனை சிபிஐ கைது செய்துள்ளது.