பூரி: பூரி ஜெகநாதர் கோவிலில், 46 ஆண்டுகளுக்கு பின், பொக்கிஷ அறை திறக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் முதல்வர் மோகன் சரண் மாஜி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள பூரி ஜெகநாதர் கோவிலின் பொக்கிஷ அறையில், விலைமதிப்பற்ற நகைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. புதையல் அறையின் உட்புறத்தில் விலையுயர்ந்த வைரங்கள், கண்ணாடியாலான ஆபரணங்கள் மற்றும் பழங்கால பொருட்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அறை கடந்த 1978ல் திறக்கப்பட்டது. அதன்பின் கடந்த 46 ஆண்டுகளாக திறக்கப்படவில்லை.
இதை சுற்றி பல சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக, புதையல் அறையின் சாவி காணாமல் போனதாக புகார் எழுந்தது. ஆட்சிக்கு வந்தால் கருவூலத்தை திறப்போம் என தேர்தல் வாக்குறுதியாக பா.ஜ.க. தற்போது, ஆட்சிக்கு வந்தவுடன், உள் அறையை திறக்கவும், அங்குள்ள விலை உயர்ந்த பொருட்களை ஆய்வு செய்யவும், பழுது பார்க்கும் பணியை கண்காணிக்கவும், உயர்மட்ட குழுவை, மாநில அரசு அமைத்தது.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி விஸ்வநாத் ராத் குழுவுக்குத் தலைமை தாங்குகிறார். குழு உறுப்பினர்கள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அப்போது விஸ்வநாத் ராத் கூறியதாவது: பொக்கிஷ அறையின் உள் அறையை வரும் 14ம் தேதி திறக்க அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை ஏற்று மாநில அரசு நேற்று பொக்கிஷ அறையை திறக்க ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், நிலையான வழிகாட்டுதல்களை பின்பற்றி புதையல் அறை இன்று (ஜூலை 14) திறக்கப்பட்டது. இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் இக்கோயிலின் திருப்பணிகளை செய்ய உள்ளனர்.