சென்னை: தமிழகத்தில் மொத்தம் 3.04 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இந்த மின் இணைப்புகளுக்கான கட்டணத்தை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்சார வாரியம் வசூலிக்கிறது. குறிப்பிட்ட தேதிக்குள் கட்டணம் செலுத்தாத மின் இணைப்புகளும் துண்டிக்கப்படுகின்றன.

பின்னர், மின் வாரிய ஊழியர்கள் அபராதத்துடன் கட்டணம் செலுத்தி மீண்டும் இணைப்பு வழங்குவது வழக்கம். இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் நடைமுறையை மாற்றி, மாதந்தோறும் மின் கணக்கீடு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதன் எதிரொலியாக 2021-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் மாதந்தோறும் வசூலிக்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இதையடுத்து, மாதாந்திர மின் கட்டணம் கணக்கிடும் முறை தமிழகத்தில் விரைவில் அமலுக்கு வர உள்ளது. மாதாந்திர மின் நுகர்வு கணக்கிடும் முறை 6 மாதங்களுக்குள் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.