போபால்: போலி இதய சிகிச்சை நிபுணரிடம் சிகிச்சை பெற்ற 7 நோயாளிகள் உயிரிழந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள டாக்டர் நரேந்திர ஜான் கேம் கைது செய்யப்பட்டுள்ளார்.
விக்ரமாதித்ய யாதவ் என்ற இயற்பெயர் கொண்ட மேற்கண்ட நபர் பிரிட்டனைச் சோ்ந்த பிரபல இதய சிகிச்சை நிபுணா்- பேராசிரியா் ஜான் கேமின் பெயரை தவறாகப் பயன்படுத்தி, தமோ மாவட்டத்தில் உள்ள மிஷனரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளாா். அவரது தவறான சிகிச்சையால் 7 போ் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆா்சி) விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் இருந்த ஜான் கேமை மத்திய பிரதேச காவல் துறை அதிகாரிகள் கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, அவர் மத்திய பிரதேசத்தின் தமோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.