சென்னை: நகங்கள் பராமரிக்க யோசனை… ஆலிவ் எண்ணைய்யை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நகங்கள் நன்றாக வளரும்.
சிலருக்கு நகங்கள் அடிக்கடி உடையும். சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும்படி வைத்தால் நகங்கள் உறுதியாகும். மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து, அதனால் நகங்களைத் தேய்த்து சுத்தப்படுத்தினால் நகங்களில் காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும்.
நகத்தை பற்களால் கடிக்கக் கூடாது. சமயங்களில் உங்களையும் அறியாமல் ஆழமாக கடித்து வைக்க, அதனால் நகங்களின் சீரான வளர்ச்சி பாதிக்கப்படும். சிலருக்கு நகங்கள் காய்ந்து வறண்டு காணப்படும். ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரில், அதில் எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து விட வேண்டும். அதில் நகமும் கைகளும் நன்றாக மூழ்கும்படி சில நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். இது கைகளும், நகமும் வறட்சி அடைவதைத் தடுக்கும்.
கிளிசரினும்,எலுமிச்சைச் சாறும் கலந்து அதை பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் நகங்கள் பளபளப்பாக இருக்கும். பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து கடலை மாவினால் கழுவினாலும் நகங்கள் பளபளப்படையும்.
சமையல் வேலைகள், பாத்திரம் கழுவுவது, டீக்கடை வேலை போன்று தண்ணீரில் அதிக நேரம் வேலை செய்பவர்கள் கைகளை சரியாக உலரச் செய்யவில்லை எனில் நகங்களில் பூஞ்சை தொற்று ஏற்படும். இதை அப்படியே விட்டால் பாக்டீரியா தொற்றும் சேர்ந்து கொள்ளும். இதனால் இவர்களுக்கு மட்டும் பிரச்னை இல்லை.
இவர்கள் சமைப்பதை சாப்பிடுபவர்களுக்கும் நோய்க்கிருமி தொற்று ஏற்படும். எப்போதும் தண்ணீரில் வேலை செய்பவர்கள், கைகளைக் கழுவி சுத்தமான துணி கொண்டு ஈரத்தைத் துடைத்தால் பிரச்னை வராது.
துணி துவைக்க தரமான லிக்விட் / சோப்புகளை பயன்படுத்துங்கள். வீட்டு வேலைகள் முடிந்ததும் கைகளை கழுவுங்கள். சிறிது நேரம் கழித்து மாய்ச்சரைசர் கிரீம் தடவுங்கள். இதனால் நகங்கள் உடையாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
பழம், காய்கறிகளை சாப்பிடுவது பளபளப்பு தரும். துத்தநாகம், வைட்டமின் பி அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.